தொன்னூற்றி ஐந்தா, தொன்னூற்றி ஏழா?

Praveen
2 min readApr 14, 2021

கர்ணன் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், 95ல் நடந்த கொடியங்குளம் வன்முறையை 97ஆக காட்டி திமுக மீது அவதூறு பரப்புகிறார் மாரி செல்வராஜ் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து அது பற்றி படித்த போது கிடைத்த தகவல்களை இங்கு தொகுக்கிறேன்.

90களில் தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் என்பது அன்றாடம். இதை 80களில் வலுப்பெற தொடங்கிய தலித் அரசியலோடு இணைத்து பார்க்கலாம். அந்த சமயத்தில் தான் தலித்கள் இன்னும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று தலித் இலக்கியம், தலித் மைய அரசியல் போன்றவை வேர் கொண்டன. அப்போது உருவாகி வந்த தலைவர்களில் திருமாவளவனும் ஒருவர். இது பரவி 90களில் தலித்கள் தங்கள் மீதான சாதிய அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்தபோது அவர்கள் மீதான ஆதிக்க சாதியினரின் வன்முறை உக்கிரமாக இருந்தது[1]. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மூன்று சம்பவங்கள் 95ல் நடந்த கொடியங்குளம் வன்முறை[2,3], 97ல் நடந்த மேலவளவு படுகொலைகள்[4], 99ல் நடந்த தாமிரபரணி படுகொலைகள்[5]. அதாவது கட்சிகளுக்கு அப்பாற்ப்பட்டு தலித்கள் மீதான அடக்குமுறையும் வன்முறையும் நிகழந்து கொண்டிருந்தன.

ஜெயா ராணி Wireல் “A study by the Madurai-based organisation Evidence says that between 1990 and 2015, there have been 16 clashes during the DMK period and 21 during the AIADMK period. Most of these are related to caste issues. Almost every caste clash has been brought to an end by police violence.”[6] என்கிறார். அதே போல அரசுகளும் இதை எந்த அளவுக்கு சிக்கலாக்க முடியுமோ அதை சிறப்பாக செய்தன. 91–96ல் அன்றைய அதிமுக அரசு சாதி தலைவர்கள் பெயரை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சூட்டியது. பின்னர் வந்த திமுக அரசும் இதை தொடர்ந்தது. குறிப்பாக வீரன் சுந்தரலிங்கனார் பெயர் தென் மாவட்ட தேவர் சாதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது[7]. இதன் தொடர்ச்சி தான் மேலவளவு படுகொலை. ஆக இதில் எந்த கட்சி ஆண்டாலும் அதிகார வர்க்கம் ஆதிக்கசாதியினர் பக்கமே நின்றிருக்கின்றது என்பது புரியும்.

மேலவளவு சம்பவத்தையே எடுத்துக்கொண்டால் கைது செய்யப்பட்ட 17 பேரில் மூவர் 2008 திமுக ஆட்சியிலும் (அண்ணா பிறந்தநாளுக்காக), மீதமிருப்போர் 2019 அதிமுக ஆட்சியிலும் (எம்ஜியார் பிறந்தநாளுக்காக) முன்னதாகவே விடுவிக்கப்பட்டனர். மேலும் இதனினும் கொடூரமான சம்பவம் மாஞ்சோலை டீ எஸ்டேட் தொழிலாளர் படுகொலைகள். திமுக ஆட்சியில் நடந்த அந்த வன்முறை சம்பவத்தை பற்றி பல இடங்களில் மாரி செல்வராஜ் குறிப்பிட்டு இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக கூட இந்த ஆண்டு கணக்கு வந்திருக்கலாம். பொதுவாக தலித் இயக்கங்கள் திராவிட இயக்கங்கள் மேம்போக்கா ஒரு சில விஷயங்களை செய்துவிட்டு ஆதிக்கச்சாதியினருக்கு ஆதரவாவே நடந்து கொள்ளுகின்றன என காலங்கலாமாக குற்றம் சாட்டி வருகின்றன (அது உண்மையும் கூட). அதனால் ஒட்டுமொத்தமாக இந்த பின்ணனிகளை எடுத்துக்கொண்டு பார்த்தால் 95ஒ, 97லோ, அதிமுகவோ திமுகவோ என்பது முக்கியமல்ல, ஆனால் தலித் அடக்குமுறை தொடர்ந்திருக்கிறது என்று புலப்படும். பின்னரும் உத்தபுரம் சாதிச்சுவர், பரமக்குடி கலவரம் என்று தொடர்ந்து இன்று அரக்கோணம் படுகொலை வரை வந்திருக்கின்றது. தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நாம் என்ன பிராயசித்தம் செய்தாலும் அது அவர்கள் அனுபவித்த வேதனையிம் ஒரு துளிக்கு ஈடாகாது என்றார் காந்தி. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கும் போது அது யாருக்கு சாதகமாய் ஒலிக்கிறது என்பதைக்காட்டிலும், அதன் ஆழம் என்ன, வலி என்ன அறிந்து, ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கி தலைகுனிவதே பொருத்தமாயிருக்கும்.

இணைப்புகள்:

[1]. https://www.hrw.org/reports/1999/india/India994-07.htm
[2]. https://en.wikipedia.org/wiki/1995_Kodiyankulam_violence
[3]. https://thenewscrunch.com/is-dhanushs-karnan-movie-depicting-history-in-a-wrong-way/35001/
[4]. https://en.wikipedia.org/wiki/1997_Melavalavu_massacre
[5]. https://en.wikipedia.org/wiki/Manjolai_labourers_massacre
[6]. https://thewire.in/caste/sterlite-protest-dalit-thoothukudi
[7]. https://thefederal.com/states/south/tamil-nadu/caste-in-tamil-cinema-karnan-raises-the-bar/

Originally published at https://prvn.info on April 14, 2021.

--

--

Praveen

Feynmanism | Linuxian | Belongs to Nikon'varse | Bibliophile