குறியீடுகளின் குறியீடு என்ன?

Praveen
3 min readMay 18, 2021

சில படங்கள் எப்போதும் மனதில் நின்றிருக்கும். சிறந்த படம் என்பதால் அல்ல. இன்னும் கொஞ்சம் சிறப்பாய் இருந்திருக்கலாமே என்பதால். முன்பு செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் போல. இப்போது கர்ணனை போல.

படத்தை மூன்றாக பிரிக்கலாம். ஒன்று ஒரு ஊரின், மக்களின் வாழ்க்கை பதிவு. இரண்டு, தொன்மங்கள் குறியீடதாலாக. மூன்றாவதாக தீமையை அழிக்கும் எளிய கதாநாயகன் எனும் வழக்கமான தமிழ் சினிமாவாக. ஆனால் மூன்றும் ஒரே படமாக வருவதால், திரைக்கதை ஜவ்வாய் இழுக்கின்றது.

பொதுவாக பள்ளர், பறையர் சமூகத்தினர், 7ம் நூற்றாண்டுக்கு முன் பெளத்த மதத்தினராக சமூக படிநிலையில் உயர்ந்த இடத்தில் இருந்தார்கள் என்றும் இந்து மத மறுமலர்ச்சி காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக சோழர்களால் படியிறக்கப்பட்டார்கள் என்கிறார் அயோத்திதாசர். ஆக நவீன தலித் இலக்கியங்களில் குறியீட்டு ரீதியான இந்து மதம் மீதான விமர்சனம் புரிந்து கொள்ள தக்கது. இதில் இன்னொரு முக்கிய அம்சம், இந்து மத புராணங்களை மாற்று பார்வையில் மீட்டுருவாக்கம் செய்வது. புதிய இராமயணத்தில் இராவணன் தான் கதாநாயகன். இராமன் வில்லன்.

கர்ணனிலும் இதன் தொடர்ச்சியை காணலாம். இங்கே கதாநாயகன் கர்ணன். வில்லன் கண்ணன். மீனை குறிப்பார்த்து அடித்து வெல்வது அர்ஜூனன் அல்ல கர்ணன். மேலும் தலையில்லாத புத்தர் சிலை பழங்குடி பண்பாட்டு அம்சங்களான இறந்த பெண் குழந்தை கன்னி தெய்வமாக படம் நெடுக வருவது, கதாநாயகனின் ஆன்மாவை குறிக்கும் விதமான கழுதை என்று குறியீடுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

படம் கொடியங்குளம் சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது. அந்த கிராமத்தினரில் பலர் வெளிநாடு சென்று சம்பாதித்து நல்ல நிலையில் இருந்தார்கள். காவல்துறை தாக்குதல் குறிப்பாக அந்த சொத்துக்களை நோக்கி தான் என பல அறிக்கைகளில் பதிவாகி இருக்கின்றது. நகைகளையும், பணத்தையும் காவலர்கள் எடுத்து சென்றார்கள் என்பது முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று. படத்தில் யானை/குதிரை வைத்திருக்கும் சமூகம் என வருவது அந்த செல்வத்தை குறித்தே என நினைக்கின்றேன். பஷீரின் ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ நினைவுகளில் வந்து செல்கின்றது. குறியீடுகளின் அடிப்படை அம்சம் அவை நாம் அறியாமல் நம் அடி மனதில் சென்று பதியும் என்பதே. ஆனால் அதிகப்படியான குறியீடுகள் எல்லாம் சேர்ந்து திகட்ட வைக்கின்றது.

படத்தின் முதன்மையான பேசு பெருள், சாதியை காரணமாக காட்டி ஒரு சாரருக்கு பேருந்து வசதி மறுக்கப்படுகின்றது என்பது. ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள், கவனமாக இதை பார்த்துக்கொள்கிறார்கள். கெஞ்சல்களுக்கும் கோரிக்கை மனுக்களுக்கும் பிறகு நிறுத்தலேனா, நிறுத்துவோம் என மக்கள் இறங்கும் போது என்ன ஆகின்றது என்பது தான் படம். ஆனால், முதல் பாதியில் அங்கும் இங்கும் என அலைந்து திரிகின்றது. குறிப்பாக கதாநாயகி, அவர் வரும் காதல் பகுதிகள் போன்றவை தனியாக துருத்தி கொண்டிருக்கின்றன. அதே போல வழக்கமான சினிமாவாக தனியொருவனை நம்பி ஊர் இருப்பதும், அவன் வந்து வில்லனை கொன்று பழி தீர்பதுமாய் இருப்பதும் சற்றே ஏமாற்றம்.

கொடியங்குளம் சம்பவத்தில் பல அடுக்குகள் உண்டு. அங்கிருந்த பள்ளியில் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையில் இருந்து, தேவர் சிலை அவமதிக்கப்பட்டது வரை. அந்த சம்பவத்தின் பின்ணனியில் உயர்சாதி தலைவர்கள், உயர் மட்ட அரசு அதிகாரிகள் என்று பலர் இருந்ததும் பின்னாட்களில் தெரிய வந்தது. ஆனால் படத்தில் ஒரு அதிகாரியின் ஆணவமாக மட்டும் சுருங்கி போனது, படத்தின் தாக்கத்தை குறைத்தாக படுகின்றது. பேருந்து வர விடாமல் தடுக்கும் உயர்சாதியினருக்கும் காவல் துறையினருக்கும் எந்த சம்மந்தமுமே இல்லை என்பது போல அமைந்திருப்பதும் திரைக்கதையின் குளறுபடியா, இல்லை அப்படித்தான் எழுதப்பட்டதா என்றும் தெரியவில்லை.

இந்திய அளவில் தலித்களின் வாழ்க்கையை பேசிய முக்கியமான படங்களில் ஒன்று மலையாளத்தில் வந்த கம்மாட்டிபாடம். அதன் ஆழத்தோடும், திரைக்கதையோடும் ஒப்பிட்டால் கர்ணன் எவ்வளவு மேலோட்டமானது என்று தெரியும். இதை தமிழ் சினிமா சூழலில் வைத்து புரிந்து கொள்வது எளிது தான். தனுஷ் படத்திற்கு எந்த அளவிற்கு உழைப்பை தந்திருக்கின்றாரோ, அதே அளவு பலவீனத்தை சேர்த்திருக்கின்றார். ஹீரோயிச காட்சிகள், காதல் காட்சிகள் போன்றவை அவரின் ரசிகர்களை மனதில் வைத்து சேர்த்ததாக கொள்ளலாம்.

அதே போல திரைக்கதையும், எடிட்டிங்கும் இன்னும் சற்று சிறப்பாக இருந்திருக்கலமோ என்று தோன்றுகின்றது. பல இடங்களில் விரிவாக சொல்லப்படும் சம்பவங்கள் அப்படியே விடப்பட்டு அலைந்து கொண்டிருக்கின்றது. தனுஷின் தந்தை மேல் வரும் இறந்த தங்கை, தன் சிறுவாட்டை காண்பித்துக்கொடுக்கிறாள். ஆனால் அதன் பின் தூரத்தில் இருந்து பார்ப்பதோடு சரி. மீண்டும் தந்தை மேல் வந்து அண்ணனுக்கு ஆணையிடுவது போல் இருந்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும். இன்னொன்று வாள். தனுஷின் அம்மா அதை போய் மறுபடி குளத்தில் தூக்கி போட்டுவிட்டு வர அடுத்த காட்சியிலேயே தனுஷ் போய் அதை எடுத்து வருகிறார். இயக்குனர் என்ன சொல்ல வருகின்றார் என்பது அவருக்கே வெளிச்சம். அதே போல பெருமாளின் கருடன் ஏழைகளின் கோழிக்குஞ்சை தூக்கி செல்கிறார். உன்னை கேக்க ஒருத்தன் வருவான் என்கிறார் ஏழை கிழவி. தனுஷ் வருகிறார் தான் ஆனால் குறியீட்டு ரீதியாக அந்த முடிவு சொல்லப்படவில்லை.

இத்தனை குறைகளை தாண்டியும் தமிழில் இது ஒரு முக்கியமான திரைப்படம். 90களில் திருப்பி அடிப்போம் என தலித் மக்கள் தங்கள் குரலை உயர்த்திய ஒரு வரலாற்றின் ஒரு துண்டு இந்த படம். இங்கே கோபம் கொண்டு பரியேறும் கதாநாயகனை தான் பதினைந்து வருடம் கழித்து இன்னொருவன் பெயராக கொண்டு சட்டம் படிக்க செல்கிறான். அந்த நாட்களைய திருமாவளவின் பேச்சை கர்ணனின் குரலாக கொண்டால், இன்றைய திருமாவின் அரசியலை பரியேறும் பெருமாளின் குரலாக காணலாம். ஆனால் இன்னும் தராசு சமநிலைக்கு வரவில்லை என்பது தான் அடிக்கோடிட்டப்பட வேண்டிய விஷயம்.

முதலில் சொன்னது போல, மிகச்சிறப்பாய் வந்திருக்கவேண்டியது, ஆனால் ஒரு புறம் இயக்குனர் கவித்துவாய் குறியீடாய் சொல்ல வந்த விசயங்களும், இன்னொரு புறம் வழக்கமான தமிழ் சினிமாவுக்கான காட்சிகளும், இன்னொரு நன்றாக வந்திருக்க வேண்டிய படமாக கர்ணனையாக்குகின்றன.

Originally published at https://prvn.info on May 18, 2021.

--

--

Praveen

Feynmanism | Linuxian | Belongs to Nikon'varse | Bibliophile