சுடர் தொடீஇ!
சுடர் தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே! 5
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை,
அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்,
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என, யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை
வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு, 10
அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம் 15
செய்தான் அக் கள்வன் மகன்.
கலித்தொகை 51ம் பாடல். கபிலர்.
சுடர் வளை அணிந்தவளே கேள்!
தெருவில் நாம் மணல் வீடு கட்டி விளையாடியதை காலால் சிதைத்தவன்
நாம் சூடியிருந்த மலர் மாலைகளை பறித்துக்கொண்டவன்
பூப்பந்து ஆடிய பந்துகளையும் எடுத்துக்கொண்டவன்
குறும்புக்கார பட்டிகாளை போல நமக்கு துன்பம் உண்டாக்கியவன்
அன்று ஒருநாள் என் வீட்டிற்கு வந்தான்.
நானும் என் அன்னையும் இருந்தோம்
‘வீட்டீலிருப்பவர்களே தாகமாய் இருக்கிறது’ என்றான்.
அன்னை, ‘ஒளிரும் அணிகலன்களை அணிந்தவளே
அந்த பொற்கிண்ணத்தில் தண்ணீர் கொண்டு போய் கொடு’ என்றாள்.
அவன் யார் என்று அறியாமல் நானும் தண்ணீர் எடுத்து சென்றேன்
அவனோ வளையல் அணிந்த என் கைகளை பிடித்திழுத்து துன்புறுத்தினான்.
பயந்துபோன நான் ‘அம்மா இவன் செய்யும் காரியத்தை பார்’
என்று கூவினேன். பதறி ஓடி வந்த அவளிடம்,
‘குடித்த நீர் விக்கிற்று’ என்றேன். தாய் அவன் பிடரியை வருடி கொடுக்க
அந்த திருடன் மகனோ கடைக்கண்ணால் கொல்பவனை போல
எனைப்பார்த்து நகைத்தான்.